Tuesday 23 June 2020

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு?; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!



கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு?; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. தினமும் கொத்துக் கொத்தாக நோயாளிகள் குவிந்தனர். உயிரிழப்பும் அதிகரித்தது. இதையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து, தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment