Add caption |
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்த ஒரு ஆய்வையும் நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அதிகரித்து வென்டிலேட்டர், படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியிருந்தது. கடந்த ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் வெளிப்படத் தொடங்கியது. இதையடுத்து மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் உலக அளவில் இந்தியா 4ம் இடத்திற்கு முன்னேறும் அளவு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினமும் 10,000 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது.கொரோனாவால் இதுவரை 9520 பேர் உயிரிழந்த நிலையில் 1,69,798 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.பெருகி வரும் நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிப்பதற்கு அரசுகள் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக்கொண்டே போகின்றன.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அமைக்கப்பட்ட செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தியதாகவும், இந்தியாவில் நவம்பர் மாதம் மத்தியில் தான் கொரோனா வைரஸ் உச்சம் அடையும் என்று அதில் தெரியவந்திருப்பதாகவும் செய்தி வெளியானது. பல்வேறு ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களிலும் இது வெளியானது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது. இந்த ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் காரணம் என்ற செய்தி தவறானது என்றும், அப்படிப்பட்ட ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை, அது ஐ.சி.எம்.ஆரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment