Saturday 27 June 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி நாளை மறுநாள் முடிவு என முதல்வர் அறிவிப்பு...






சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 2வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியது. இதன் காரணமாக, ஜூலை 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்புமா அல்லது இன்னும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 30ம் தேதியுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 95 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே மீண்டும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதேபோன்று மதுரை மாவட்டத்திலும் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். அப்படியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி, தமிழக அரசு தினசரி புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு  ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, என்னென்ன தளர்வுகள் இருக்கும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா  தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில்  3509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் 2வது நாளாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இது, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும்  அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 24ம் தேதி முதல்வர் எடப்பாடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு கருத்துகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர். அதேபோன்று, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற திங்கட்கிழமை (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா என்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் தெரிவித்தார்.

தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோன்று, ஆகஸ்ட் 12ம் தேதி வரை வழக்கமான ரயில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அறிய மக்கள் ஆவலோடு உள்ளனர். வணிகர்களும், ஜூலை 1ம் தேதியுடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடியும், தமிழகத்தில் இனி ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று கூறி இருந்தார். ஆனாலும் மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனையின்படியே தமிழக அரசு இதுவரை செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அது, வருகிற30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
* கடந்த 95 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
* கொரோனாவை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதித்து, இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற புதிய புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நன்றி :தினகரன்

No comments:

Post a Comment