Wednesday, 24 June 2020

நாடு முழுவதும் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.





பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் என மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதன்மூலம், இதர வர்த்தக வங்கிகள் போலவே அவ்வங்கிகள் செயல்படும்.


இதற்காக ஜனாதிபதி விரைவில் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த முடிவால், மேற்கண்ட கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஊழல்கள் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வங்கிகளில் மொத்தம் 8 கோடியே 60 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களது சேமிப்பு பணம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கோடி, அந்த வங்கிகளில் உள்ளது. பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ், சிறுதொழில் நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான சிசு கடன்கள் வழங்கப்படுகின்றன.கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, இப்பிரிவில் 9 கோடியே 37 லட்சம் கடன் கணக்குகள் உள்ளன. ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் தொகை நிலுவையில் உள்ளது.

இந்த கடன்தாரர்களில் தகுதியானவர்களுக்கு கடனுக்கான வட்டியில் 2 சதவீத தள்ளுபடி அளிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 12 மாதங்களுக்கு இச்சலுகை வழங்கப்படும். தவறாமல் கடன் தவணையை செலுத்திய மாதங்களுக்கு மட்டும் வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.1,542 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

சிறுதொழில் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைத்து, ஆட்குறைப்பு இன்றி அவை செயல்படுவதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.15 ஆயிரம் கோடியில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு நிதியம் தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பால், இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் கால்நடை தீவன தொழிற்சாலைகளை தொடங்கும் தனியாருக்கு 4 சதவீதம்வரை வட்டி தள்ளுபடி அளிப்பதற்காக இந்த நிதியம் அமைக்கப்படுகிறது.

இத்துறையில் 35 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்குள் உட்பிரிவுகளை வரையறுப்பது குறித்து ஆராய இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நன்றி ‌:தினத்தந்தி

No comments:

Post a Comment