உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவலின் வேகம் குறைவில்லை.
தமிழத்தில் நேற்று புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,373 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது.
இதேபோல் நேற்று கொரோனாவுக்கு 49 பேர் பலியானார்கள். இவர்களில் 40 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 625 ஆகவும், சென்னையில் சாவு எண்ணிக்கை 501 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்ட போதும், அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக ஆஸ்பத்திரி அதிகாரி தெரிவித்தார்.
அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதே ஆஸ்பத்திரியில்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, அவருடைய மனைவி, மகள் மற்றும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி
No comments:
Post a Comment