கலெக்டருக்கு இன்ப அதிர்ச்சி: சர்வதேச பெண் குழந்தைகள் தின ருசிகரம்
சர்வதேச பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சியில், மாணவி ஒருவர், கலெக்டர் மகேஸ்வரி போல் வேடமணிந்து, அவருக்கே இன்ப அதிர்ச்சி அளித்தார்.ஆவடியில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பேரணி, அறிவியல் கண்காட்சி, மாணவியர் சந்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.இதில், 500க்கும் மேற்பட்ட மாணவியர், பருத்திப்பட்டு, மகாலட்சுமி கல்லுாரியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேரணி சென்றனர்.
பல துறைகளில் சாதித்த பெண்களின் வேடமணிந்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி முன், மாணவியர் தோன்றினர்.இதில், அன்னை தெரசா, மலாலா, நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டோரை போல் வேடமணிந்து மாணவியர் அசத்தினர். அவர்களை, ஆசிரியர்கள் கலெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது, புடவை அணிந்து மிடுக்காக தோன்றிய மாணவியை, 'இவர் தான் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி' என, கலெக்டரிடமே அறிமுகப்படுத்தினார். இதை பார்த்து, இன்ப அதிர்ச்சியடைந்த கலெக்டர் மகேஸ்வரி, அந்த மாணவிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
அறிவியல் கண்காட்சியில், அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவர்கள் எஸ்.சூர்யா, 13, யு.ஞானதீப், 14, ஆகியோர் அமைத்த, 'தானாக திறக்கும் குப்பை தொட்டி'க்கு, அனைத்து தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன.கல்லுாரி மாணவியர் உருவாக்கிய சந்தையில், 'பிகில்' பிரியாணி உள்ளிட்ட பலதரப்பட்ட உணவு வகைகள், பொருட்கள் விற்பனைக்கு வந்தன.

No comments:
Post a Comment