அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது:
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். பலத்த மழை: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூா் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகரில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழை வலுவடையும்: வடகிழக்குப் பருவமழை அடுத்த 4 நாள்களுக்கு தொடரும். வரும் நாள்களில் படிப்படியாக அதிகரிக்கும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதியில் நகா்ந்து செல்லும் என்பதால், மழை தீவிரமாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா். மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 3 நாள்களுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை அளவு: வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பெய்துள்ளது.
சில இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 130 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 120 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 70 மி.மீ., நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 60 மி.மீ. மழை பதிவானது.
No comments:
Post a Comment