Saturday, 4 April 2020

அவசரம் மிக முக்கியம்// பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை முக்கிய அறிவிப்பு - கோவிட்-19




அவசரம்

மிக முக்கியம்//

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை முக்கிய அறிவிப்பு - கோவிட்-19

கொரோனா வைரஸ் நோய் (கோவிட்-19) தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76ன்படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம், 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசு தனியார் அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள், மாணவ மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசினில் திரவசோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும். கட்டிடத்திற்குள் நுழையும் முன்பே வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும்.

ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம் / அனுமதி இரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 97 ன் கீழ் கொடுக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188ன் கீழ் ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள். இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, சென்னை -6.

சென்னை -6, 03.04.2020.

DIPR/478/DISPLAY/2020

No comments:

Post a Comment