அடுத்தகட்ட இணையதளப் புரட்சி சீனாவில் இன்று 5ஜி சேவை ஆரம்பம்
முனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை
சீனாவில் இன்று 5ஜி சேவை ஆரம்பமாகிறது. அடுத்தகட்ட இணையதளப் புரட்சியின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.
5ஜி என்பது செல்போன்களுக்கு மட்டுமே உரிய அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும். தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் 3 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு எச்.டி. திரைப்படத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
சீனாவில் 5ஜி சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. சைனா மொபைல்ஸ், சைனா யூனிகாம், சைனா டெலிகாம்ஸ் ஆகிய சீனாவின் மூன்று அரசு நிறுவனங்கள் இச்சேவையை இன்று தொடங்குவதாக தமது வலைதளங்களிலும், ஆன்லைன் ஸ்டோர்களிலும் தெரிவித்துள்ளன. இதற்கான கட்டணம் மாதம் ஒன்றுக்கு 128 யுவானில் (சுமார் ரூ.1,300) இருந்து தொடங்குகிறது.
உலகின் தொழில்நுட்ப சக்தியாக உருவாக வேண்டும் என்ற சீனாவின் இலட்சியத்தில் இது அடுத்த அடியாக கருதப்படுகிறது. மேலும் வர்த்தக விவகாரங்களில் சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வித பதற்றம் நீடித்து வரும் நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
5ஜி சேவை தொடங்குவதை முன்னிட்டு சீனாவின் சியோமி, ஹூவாவே உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் புதிய செல்போன் சாதனங்களை அறிமுகம் செய்யத் தொடங்கி உள்ளன. சியோமி நிறுவனம் புத்தாண்டில் 10-க்கும் மேற்பட்ட 5ஜி செல்போன்களை வெளியிட இருப்பதாக கூறி இருக்கிறது.
இந்தியாவில் தற்போது ஆரம்ப நிலையில் உள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுக்குள்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment