Saturday, 30 May 2020

மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ‘தந்தி‘ டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.



மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ‘தந்தி‘ டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து நிற்க, அது வெறும் கண் துடைப்பு நாடகம் என இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு ரிசர்வ் வங்கி அறிவித்தும் வங்கிகள் மாத தவணைகளை பிடித்தம் செய்வது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம்.

கேள்வி:- 20 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த தொகை பற்றி பலரும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். “உண்மையிலேயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தான் அரசாங்கத்தின் நிகர செலவாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் என்கிற கணக்கே தவறு“ என்கின்றனர். இதற்கு உங்களின் பதில் என்ன?

பதில்:- இதை அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த ரூ.20 லட்சம் கோடியில் எது எங்கிருந்து வருகிறது என்ற கணக்கை யார் வேண்டுமானாலும் போட முடியும். எதையும் நாங்கள் மூடி மறைக்கவில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் கைகளில் எவ்வளவு பணம் சேருகிறது என்பதே முக்கியம். வங்கிகள் மூலமாக சேருகிறது. அவர்களுக்கு தேவையான முதலீடுகளை திரட்டுவதற்கான உதவித்தொகை, வட்டி மானியம் இவை மூலம் சேருகிறது. இன்று என்னுடைய முக்கிய குறிக்கோள், மக்கள் கைகளுக்கு பணம் செல்கிறதா என்பதே. அவர்கள் நடத்தும் தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஊரடங்கினால் தொழில்களை நடத்த முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அன்று பேசும்போது, முதலில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும், பின்னர் அவர்களின் சொத்துகள், தொழில்களுக்கு பாதுகாப்பு தேவை என்றார். தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு என்ன தேவையோ அவற்றை அளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது அரசிடம் இருந்து சென்றுள்ளதா? அல்லது ரிசர்வ் வங்கியிடம் இருந்து சென்றுள்ளதா? என்று அலசிப்பார்ப்பது உங்களின் உரிமை. இதில் ரகசியம் எதுவுமில்லை. என்னுடைய நோக்கம், தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்பதே.

கேள்வி:- மக்களுக்கு நேரடி நிதி உதவி அளிக்கும் வகையில், குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை அளித்திருக்க முடியாதா?

பதில்:- அரசு அனைத்து துறைகளின் மந்திரிகளுடன் ஆலோசித்த பின், துறை சார் நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பிறகு தான், இந்த முறையில் இதை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த முறைக்கு பதிலாக, வேறு முறைகளில் இதை அளித்திருக்கலாம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. அதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் அவை அனைத்தையும் ஆராய்ந்த பின், இந்த நிதி தொகுப்பை உருவாக்கினோம்

கேள்வி:- வங்கி கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை 6 மாதங்களுக்கு செலுத்த வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் பல இடங்களில் வங்கிகள் மாதாந்திர இ.எம்.ஐ. தொகைகளை பிடித்தம் செய்வதாக புகார்கள் வருகின்றனவே?

பதில்:- வங்கிகள் அப்படி பிடித்தம் செய்தால் அது தவறு. உங்களுக்கு இதை பற்றி வரும் புகார்கள், செய்திகளை எங்களுக்கும் அனுப்ப கேட்டுக் கொள்கிறேன். இதுவரை எனக்கு நேரடியாக எந்த புகாரும் வரவில்லை. அப்படி யாராவது அனுப்பினால், கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுப்பேன். நிதியமைச்சக வலைதளத்தில், மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதற்கு புகார்களை அனுப்பலாம்.

கேள்வி:- தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நிதி உதவிகள், கடன்கள் அளிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் உற்பத்தியை மீண்டும் தொடங்கினாலும், பொருட்களை வாங்க மக்களிடம் பணம் இருக்கிறதா? யார் கைகளிலும் பணம் இல்லாத சூழலில், நுகர்வை எப்படி அதிகரிப்பது?

பதில்:- தேவை மற்றும் நுகர்வு என்ற இரண்டு பகுதிகளும், தனித்தனியான பகுதிகளாக கருதப்பட்டு, அதன்மூலம் பொருளாதார அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நடைமுறையில் இவை இரண்டும் அப்படி முற்றிலும் தனித்தனியாக பிரித்து பார்க்கக்கூடியவை அல்ல. ஒரு பெட்டிக்கடை நடத்துபவருக்கு வங்கி மூலம் கிடைக்கும் கடன் உதவியை வைத்து முதலில் தான் அளிக்க வேண்டிய தொகைகளை, தன் ஊழியர்களுக்கான சம்பளத்தை கொடுப்பார். சம்பளம் வாங்குபவர்கள், அதை செலவு செய்வார்கள். அவர்கள் அதை எதற்கு செலவழிக்கிறார்களோ, அத்துறையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். கடையை திறந்த பின், அங்கு உள்ள பண்டங்களில், இருப்பு குறைந்தாலோ, அல்லது முழுவதும் விற்றுப் போனாலோ அவற்றை மீண்டும் வாங்குவார். அது தேவையை உருவாக்கும். பெட்டிக்கடைக்காரர்கள், வணிகர்கள் இவர்கள் இப்படி பொருட்களை வாங்கும்போது அது தேவை என்றுதானே கருதப்படும் ?

கேள்வி:- மாநிலங்கள் கடன் பெறும் அளவு, மாநில உற்பத்தியில் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட பல முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களே?

பதில்:- அதை எதிர்ப்பது அவர்களின் உரிமை. நிதிக்குழு மூலம் மத்திய அரசில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி விவகாரங்களில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கக்கூடாது. விதிக்கவும் இல்லை. மாநிலங்கள் கடன் வாங்கும் அளவின் வரம்பு 3-ல் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதில், 0.5 சதவீதம் வரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அடுத்த ஒரு சதவீதத்தை நான்காக பிரித்து, ஒவ்வொரு கால் சதவீதத்துக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று மிக அதிக துன்பங்களை அடைந்துள்ளனர். இதை பற்றி மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. “ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை“ திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும். அவர்களின் குடும்பம் ஒரு பகுதி ரேஷன் பொருட்களையும், இவர்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இவர்கள் மற்றொரு பகுதியையும் பெற்றிருக்க முடிந்திருக்கும். ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகள், கால் சதவீத அளவுக்கு கடன்களை அதிகம் வாங்கலாம். இதில் என்ன தவறு?

கேள்வி:- பிற மாநில தொழிலாளர்களுக்கு, அம்மாநிலங்களில் என்ன அளிக்கப்படுமோ, அதே அளவிலான ரேஷன் பொருட்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களா?

பதில்:- டிஜிட்டல் ஸ்கானிங் முறையில், அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டதை கழித்து, மீதமுள்ள அளவுக்கு இங்கு அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இது கூடாது என்றால், அது உங்களின் விருப்பம். ஆனால் இதை நிபந்தனையாக விதிக்கக்கூடாது என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

கேள்வி:- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்காமல், அதற்கு பதிலாக அவர்களின் வங்கிக் கணக்குகளில், மானியத்தொகையை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளதே?

பதில்:- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அப்படி அளிப்பதில் ஒரு முறைப்படுத்துதல் அவசியம் என்கிறோம். மின்சார வாரியத்துக்கு வர வேண்டிய தொகைகள் வராமல் நிலுவையில் இருப்பதால், மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை அளிக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்ய மறுத்தால், யார் பாதிப்படைவார்கள்? ஏழை மக்கள், விவசாயிகளை பாதிக்கும். இப்போது அப்படி ஒரு நிலை உருவானதால், அவசர அவசரமாக ரூ.90 ஆயிரம் கோடியை மின்வினியோக நிறுவனங்களுக்கு, நிபந்தனைகளே இல்லாமல் அளித்திருக்கிறோம். நீங்கள் இலவச மின்சாரத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் அதற்கு ஆகும் கட்டணத்தை மின்வாரியத்துக்கு மாநில அரசுகள் ஒழுங்காக அளிக்க வேண்டும். அப்போது தான் மின்வினியோகம் சீராக நடைபெறும். அதை தான் நாங்கள் சொல்கிறோம். ஒன்று மாநில அரசு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மானியத்தொகையை செலுத்தலாம். அதை வைத்து அவர்கள் மின்கட்டணத்தை செலுத்துவார்கள். அல்லது இதற்கு பதிலாக மொத்தமாக அரசே இந்த தொகையை மின்வினியோக நிறுவனங்களுக்கு அளிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதை செயல்படுத்தலாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். 

நன்றி: தினத்தந்தி.

No comments:

Post a Comment